தலைமையகம் : 4/16 இராம் நகர், தூத்துக்குடி , 628002
|நிறுவுநர் : டாக்டர். எம்.எஸ். உதயமூர்த்தி
டாக்டர்.எம்.எஸ் உதயமூர்த்தி அவர்கள் மயிலாடுதுறை அருகில் உள்ள விளநகர் என்ற சிற்றூரில் 1928
ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் நாள் பிறந்தார் மயிலாடுதுறையில் பள்ளிப்படிப்பை முடித்து, அண்ணாமலை
பல்கலைக்கழத்தில் வேதியியலில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
பின்னர் சென்னைப் பல்கலைக்கழத்தில் வேதியியல் மற்றொரு முதுகலைப் பட்டம் பெற்றார்.
பின்பு அமெரிக்கா சென்று, விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் 1966-ல் மருத்துவ வேதியியலில்
முனைவர் பட்டம் பெற்றார்.
பின்னர் அமெரிக்காவிலுள்ள “மவுண்ட்செனரியோ” “மின்ன சோட்டா” “ஐடகோ” பல்கலைக்கழகங்களில்
பேராசிரியராகப் பணியாற்றினார்.
அதன்பின் விஸ்கான்சினில் உள்ள ஓர் உணவு தயாரிக்கும் நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக
நான்காண்டுகள் பணியாற்றினார்.
அமெரிக்கா செல்லும்முன் சீர்காழி சபாநாயகர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், கும்பகோணம்
கல்லூரியிலும், கிண்டி பொறியியல் கல்லூரியிலும் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
அவர் மனைவியின் பெயர் சீதாலட்சுமி, சித்தார்த்தன், அசோகன் என்னும் இரண்டு மகனும், கமலா என்னும்
மகளும் உள்ளனர்.
1986-ம் ஆண்டு அமெரிக்காவில் “பார்கிளே கெமிக்கல்ஸ்” என்னும் நிறுவனத்தை தொடங்கினார்.
அமெரிக்காவில் வாழ்ந்த காலத்தில் ‘மனயியல்’ குறித்த நூல்களைக் கற்பதில் மிகுந்த நாட்டம்
கொண்டார்.
தத்துவமேதை ‘ஜேம்ஸ் ஆலன்’ எழுத்தால் ஈர்க்கப்பட்டு, மனயியல் தொடர்பான ஆராய்ச்சி கட்டுரைகளை
எழுதத் தொடங்கினார்.
ஆனந்தவிகடன், தினமணிகதிர் போன்ற இதழ்களில் அவர் எழுதிய மனோதத்துவ கட்டுரைகள் பெரும் வரவேற்பைப்
பெற்றன. அவற்றுள் குறிப்பிடத் தக்கவை.
1972-ல் எழுதிய “நாடு எங்கே செல்கிறது?” என்ற கட்டுரைத் தொடர் 1974-ல் எழுதிய “எண்ணங்கள்”
கட்டுரைத்தொடர்.
தொடர்ந்து, “உன்னால் முடியும் தம்பி” “சிந்தனை தொழில் செல்வம்” “தன்னம்பிக்கையும் உயர் தர்ம
நெறிகளும்” “தலைவன் ஒரு சிந்தனை” “நீதான் தம்பி முதலமைச்சர்”இ “சாதனைக்கோர் பாதை” “வெற்றிக்கு
முதல்படி” போன்ற சுயவளர்ச்சிக்கான 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
அவரது எழுச்சியூட்டும் நூல்களைப் படித்து வாழ்வில் முன்னேறியவர்கள் பலர்.
எழுதினால் மட்டும் போதாது, சமுதாய முன்னேற்றத்துக்காக களத்தில் இறங்கி உழைக்க வேண்டும் என்ற
எண்ணத்தில் 1988-ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். இயக்கத்தை தொடங்கினார்.
அவரது உயரிய கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக, இயக்குநர் பாலசந்தர் ‘உன்னால்
முடியும் தம்பி’ என்ற திரைப்படத்தை திரு கமலஹாசன் அவர்களை கதாநாயகனாக வைத்து தயாரித்தார்.
அதில் கதாநாயகன் பெயர் உதயமூர்த்தி தமிழ்நாடு அரசியலில் மிகப் பெரிய ஆளுமைகளாக விளங்கிய அறிஞர்
அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் எம்.எஸ் உதயமூர்த்தி
மூன்று தலைவர்களும் அமெரிக்கா சென்றபோது அவர்களுக்கு நட்புடன் கூடிய உறுதுணையாக விளங்கியவர்
அவர்.
தன் எழுத்தின் மூலமும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய டாக்டர் எம்.எஸ்
உதயமூர்த்தி சனவரி 21,2013-ல் தனது 85-வது வயதில் காலமானார் அவரது சிந்தனைகள் இன்றைக்கும்
இயக்கத்தை இயக்கி வருகிறது.
|முன்னாள் தலைவர் பேரா.அ.சண்முகம்.
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி மறைவுக்குப் பின்னர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அரசியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் அ.சண்முகம் அவர்கள் இயக்கத்தை தலைமையேற்று வழிநடத்தினார் சிறந்த பண்பாளர். எல்லோரையும் சமமாக மதிக்கும் முற்போக்கு சிந்தனையாளர். இனிமையான சொல்லுக்கும், இயக்கத்தை ஒரு குடும்பமாக அரவணைத்து செல்லும் மாண்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர்.
தன் இறுதி காலம் வரை-2018 நவம்பர் வரை இயக்கத்தை கட்டிக்காத்து வந்த ஆளுமைமிக்க தலைவர் அவர்.
|தலைவர்:
மருத்துவர். த. இராசலிங்கம் MBBS.
ஆற்றல்மிகு மருத்துவர். த. இராசலிங்கம் அவர்கள், சமூக சீர்திருத்தவாதி; தமிழ் பற்றாளர், சிறந்த நிர்வாகி, பேச்சாளர், எழுத்தாளர், மரபுக்கவிஞர்; “தமிழ் அறம்” எனும் மாத இதழின் பதிப்பாசிரியர்; மாட்சிமை பொருந்திய மக்கள் சக்தி இயக்கத்தின் மாநிலத் தலைவர்.